சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை மையம் எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார். இதனிடையே, பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், நிவாரண முகாம்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.