கோத்தகிரி : கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகலில் வறண்ட வானிலை நிலவும் நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நீர்பனிப்பொழிவு துவங்கியது. இதனால், நகரப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது.
கடும் குளிரால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலை நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்கு மற்றும் பக்கவாட்டு இண்டிகேட்டர்களை எரிய வைத்து வாகனங்களை இயக்குகின்றனர். காலையில் கடும் குளிரால் வேலைக்குச் செல்லும் மக்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் கடும் குளிரிலேயே அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.