கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கொடைக்கானலில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிக்காலத்தில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் தொடங்காத பனிக்காலம் தற்போது மாத இறுதியில் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததே இதற்கு காரணம் என்கின்றனர். மிகவும் தாமதமாக துவங்கினாலும், குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிக அளவில் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது கொடைக்கானல் ஏரிக்கரை மற்றும் மலைப்பகுதிகளில் பல இடங்கள் வெள்ளை கம்பளம் விரித்து காட்சியளிக்கிறது.

இந்த பனிமூட்டம் காரணமாக ஏரியில் நடைபயணம் செல்பவர்கள் வெயில் வந்த பிறகே நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏரி பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் தாமதமாக கடைகளை திறக்கின்றனர். கொடைக்கானலில் நிலவும் கடும் குளிரால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, காலையிலேயே பணியை துவங்கி வருகின்றனர்.
அதேபோல் மாலையில் கடும் குளிர் நிலவுவதால், வேலையை சீக்கிரமாக முடித்து வருகின்றனர். இது தவிர, பகலில் கம்பளி ஆடைகள், ஜெர்சிகள், ஸ்வெட்டர்கள், மப்ளர்கள், கையுறைகள் போன்றவற்றை அணிவது வழக்கம். அதேபோன்று, இரவு நேரங்களில் வீடுகளில் ஹீட்டர் போன்ற சாதனங்களை பயன்படுத்தவும், இரவில் படுக்கையில் கூடுதல் போர்வைகளை பயன்படுத்தவும், குளிர் கிரீம் போன்ற சாதனங்களை பயன்படுத்தவும் வேண்டிய நிலையில் உள்ளனர். இருப்பினும், பனிக்காலத்தை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.