சென்னை ரயில்வே நிலையங்களில் சமீபகாலமாக ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் ஏறும் வடமாநில பயணிகள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் இத்தகைய அத்துமீறல்கள் பெருமளவில் நடைபெறுவதால், முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனர். ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே வடமாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் ஏறி இருக்கைகளையும், இடங்களையும் ஆக்கிரமிக்கின்றனர். இதனால், சீட் இருந்தும் ஏற முடியாமல் வீடு திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே இந்த பிரச்சினைக்கு கடிவாளம் போட முடிவு செய்துள்ளது. ரிசர்வ் பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர், சென்ட்ரல், சேலம் போன்ற நிலையங்களில் பண்டிகை பயணிகள் அதிகமாக இருப்பதால், அங்கும் ரெயில்வே போலீசார் நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளனர். சமூக ஊடகங்களில் பயணிகள் எடுத்த வீடியோக்கள் வைரலாகியுள்ளதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து பாட்னாவுக்கு சென்ற ரயிலில் முன்பதிவு இல்லாத பயணிகள் ரிசர்வ் பெட்டிகளில் ஏறியதால், ரிசர்வ் செய்த பயணிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பலரும் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், முன்பதிவு பயணிகள் தங்கள் சிரமத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரளாகப் பயணம் செய்கிறார்கள். இதனால், ரயில்வே துறையினர் அதிகப்படியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பதிவு இல்லாமல் ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்யும் நபர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது.