சென்னை: தமிழக அரசு பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 17-ம் தேதி வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில், 18-ம் தேதி சனிக்கிழமை செயல்படும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், அன்றைய தினம் ஒரு நாள் செயல்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தை மாதத்தின் முதல் வேலை நாளான சுபமுகூர்த்தத்தில், 20-ம் தேதி அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்களை ஒதுக்குமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, வரும் 20-ம் தேதி, ஒரு துணைப் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 துணைப் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன், அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.