சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது பதவிக்காலத்தை ஒரு வருடம் நீட்டித்து உத்தரவிட்டார். இதற்கிடையில், துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்காக, முன்னாள் அரசு முதன்மைச் செயலாளரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஜோதி ஜெகநாதன் ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல்கலைக்கழக செனட் சார்பாக தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனும், சிண்டிகேட் சார்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கராஜூம் உறுப்பினர்களாக உள்ளனர். தேடல் குழுவின் நோடல் அதிகாரியாக தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளர் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, உயர் தகுதிகள், நேர்மை, ஒழுக்கம் மற்றும் நிறுவன அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட சிறந்த கல்வியாளர்களிடமிருந்து தேடல் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பொருத்தமான தகுதிகள் மற்றும் பணி அனுபவம் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பெரியார் பல்கலைக்கழக வலைத்தளத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை PDF வடிவத்தில் மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். ஒரு நகலை ஜூன் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் பெரியார் பல்கலைக்கழக தேடல் குழுவின் நோடல் அதிகாரிக்கு தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.