சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததையடுத்து, 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது அணி உருவாகும் விவாதம் அரசியலில் புதிய ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி இதுவரை தேர்தலில் தனித்து போட்டியிட்டு வந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான ஒரு படியாகவே சீமான் மற்றும் ஓ.பி.எஸ் இடையிலான இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு சென்னையில் நடைபெற்றதாகவும், அதில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ் தனது தனிக்கட்சியுடன் தேர்தலை எதிர்கொள்வதுடன், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியாக போட்டியிடும் வாய்ப்புகள் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இந்த சந்திப்பு குறித்து சீமான் விளக்கம் அளிக்கும்போது, “எங்கள் உறவு தந்தை-மகன் உறவைப் போல. அடிக்கடி சந்திப்பது வழக்கம். அதுபோலவே இந்த முறையும் அவரை சந்தித்தேன். இதில் அரசியல் எந்தவிதத்திலும் இல்லை,” என்று தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சந்திப்பு எதிர்கால அரசியல் நிலவரங்களை மாற்றும் ஒரு தொடக்கமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.