சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1,215.92 கோடியில் 3 பெட்டிகளுடன் கூடிய 36 மெட்ரோ ரயில்கள், இரண்டாவது கட்டமாக ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயக்கப்படும்.
இதையடுத்து, பிப்ரவரி 8-ம் தேதி, ரயில் பெட்டிகள் தயாரிப்பை அந்நிறுவனம் தொடங்கியது. அதையடுத்து, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் ரயில் பணிகள் நிறைவடைந்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனைக்கு சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, மூன்று பெட்டிகள் கொண்ட முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நாளை தொடங்கும் என்று கூறப்பட்டது. சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:-
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை அக்டோபர் 18-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் மழை காரணமாக 26-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேடை அமைப்பு, அலங்காரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடியும் தருவாயில் இருந்தன. ஆனால் திடீரென சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அடுத்த வாரம் அல்லது தீபாவளி பண்டிகைக்கு பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான பாதையில் குறிப்பிட்ட கி.மீ.க்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயின்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான சோதனைகள் நடத்தப்படும். ரயில் சேவை மக்களுக்கு வழங்கப்படும் வரை சோதனை ஓட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.