தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினரின் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், அவர்கள் வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், “அதிகாரம் இல்லாத போது வாக்கு பெட்டகத்தை அட்சயபாத்திரமாய் பார்ப்பவர்கள், அரியணை ஏறியதும் எங்களை புறக்கணிக்கிறார்கள். 2003-ஆம் ஆண்டு பகை முடித்தோம், 2026-ஆம் ஆண்டு நம்பிக்கை துரோகத்தை வேரறுப்போம்” என எச்சரித்துள்ளனர். மேலும், காலமுறை ஊதியம், இடைநிலை ஆசிரியர்களின் நிலை, சத்துணவு ஊழியர்களின் பிரச்சினை, சாலை பணியாளர்களின் நீக்கப்பட்ட காலத்தை பணி காலமாக்காதது போன்ற குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திமுக கடந்த தேர்தலில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. அதனை நம்பிய அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பெரிதும் ஆதரித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் தற்போது அவர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
பல அரசு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், பென்சன் பிரச்சினை மிகப்பெரியதாகவே பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் இதன் அதிர்வுகள் ஆட்சிக்கு சவால் ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.