சென்னை: சென்னை – நாகர்கோவில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வரும் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஜூன் 20-ம் தேதி சென்னை வரவிருந்தார். அப்போது, சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க, பிரதமர் மோடி சென்னை செல்வதாக, அவ்வப்போது செய்திகள் வெளியாகின. ஆனால், மோடியின் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் 31ம் தேதி சென்னை – நாகர்கோவில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை – நாகர்கோவிலில் தினசரி வந்தே பாரத் ரயில் சேவை, பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் சென்னை பயணம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. அதே நேரத்தில் சென்னை சென்ட்ரலிலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அவர் என்னென்ன திட்டங்களை தொடங்குவார் என்பது குறித்த விவரம் ஓரிரு நாளில் தெரியவரும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.