திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த 13-ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் மலையில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வழக்கம் உள்ளது.
அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக அண்ணாமலையார் கோயில் பணியாளர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் தினமும் மலைக்கு சென்று மகா தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் மலை உச்சிக்கு நெய், திரி அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11-வது நாளாக மலையில் மகா தீபம் காட்டப்பட்டது.
பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசிய போதிலும், மலையில் மகா தீபம் தொடர்ந்து காண்பிக்கப்பட்டது. மேலும் மலையில் மகா தீபம் காட்டும் நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு வர விரும்புகின்றனர். இதனால் திருவண்ணாமலையில் கடந்த 11 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் 11 நாட்களாக மலையில் காட்சியளித்த மகா தீபம் நேற்று இரவு நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மலையில் இருந்து மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் கொப்பரை வைக்கப்பட்டு இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, ஆருத்ரா தரிசனத்தின் போது, மகா தீபக் கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட தீபம், நடராஜருக்கு சாற்றப்பட்டு, அதன் பின், பக்தர்களுக்கு தீபச்சுடர் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.