போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தை பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைந்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு போச்சம்பள்ளி பகுதியில் கரும்புகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. நல்ல உயரமும், ஏராளமாக கிடைக்கும் கரும்புகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். வரும் வைகுண்ட ஏகாதசி பண்டிகையின் போது கரும்பு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், பொங்கல் பண்டிகையின் போது அனைத்து கரும்புகளும் விற்று தீர்ந்துவிடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கு விற்கப்படுகிறது.