தொடக்கக் கல்வித் துறை இயக்குனரகம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பதவி உயர்வுக்கு தகுதியான, 329 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், முன்னுரிமை அடிப்படையில் 170 பேர் ஜூன் 14-ம் தேதி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான பதவி உயர்வு கவுன்சிலிங் டிசம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு EMIS தளம் மூலம் ஆன்லைனில் நடத்தப்படும். முதன்மைத் தகுதிப் பட்டியலில் 171 முதல் 329 இடங்களைப் பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த கவுன்சிலிங்கை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராக இருக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.