புகழ்பெற்ற ஊட்டி ரேஸ்கோர்ஸை, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.822 கோடி குத்தகை நிலுவை காரணமாக வருவாய்த் துறையினர் மீட்டுள்ளனர். கடந்த 21ம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்காத காரணத்தால் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டுகளாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு குதிரை பந்தயம் நடத்தி வருகிறது. இந்த குதிரை பந்தயம் உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
இந்நிலையில், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், 1978ம் ஆண்டு முதல், அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை செலுத்தவில்லை.இதுவரை, குத்தகை தொகை, 822 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், வருவாய்த்துறையினர் 21.6.2024 அன்று மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் அந்த நோட்டீசுக்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் போலீசார் உதவியுடன் வருவாய்த்துறையினர் நிலத்தை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். நிலுவைத் தொகை தொடர்பான பிரச்னைக்கு வருவாய்த்துறையினர் ரேஸ் கோர்ஸ் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி சீல் வைத்தனர்.
இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சுற்றி அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டதாக பதாகைகளை வைத்தனர். மேலும் ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உள்ள அலுவலக கட்டிடங்கள் மற்றும் நிர்வாக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.