ஊட்டி: சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஊட்டி அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரண்மனை பூங்காவிற்கு வி.ஐ.பி.க்கள் மற்றும் சில சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்கின்றனர்.
மேலும், இங்குள்ள ஓய்வு இல்லத்திற்கு தமிழக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வருகை தருகின்றனர். இதனால் இங்கு பூங்கா எப்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா, வழக்கம் போல் கோடை சீசனுக்கு தயாராகி வருவது வழக்கம். இந்நிலையில், வரும் கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மலர் நாற்றுகள் நடப்பட்டு, பூங்காவை ஊழியர்கள் தயார் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள பெரிய புல்வெளியை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரிய மைதானத்தை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.