சென்னை: தமிழக அரசு, 2025-26 கல்வியாண்டிற்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act) அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மாநிலத்திற்கான நிதியை விடுவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் மாணவர்கள் இலவசமாக சேர்க்கை பெற வாய்ப்பு பெறுகின்றனர். எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள், 8ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் செலுத்தாமல் கல்வி பயில முடியும். சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் பள்ளிகள் அனைத்தும் – மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, நர்சரி, பிரைமரி பள்ளிகள் – தங்கள் மொத்த சேர்க்கையில் 25% இடங்களை RTE மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
இந்த வாய்ப்புக்காக பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சமூக ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டோர், ஆதரவற்றோர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை விடக் குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முகவரி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம்.
விண்ணப்பம் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் அருகிலுள்ள அதிகபட்சம் 5 பள்ளிகளை தேர்வு செய்யலாம். ஒரு பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் (Random Selection) முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், பள்ளிகள் அதை 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான சிறப்பு குழுக்கள் கண்காணிப்பை மேற்கொள்ளும்.