சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வில் பிளாக் 4-ன் கீழ் காலி பணியிடங்கள் லட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளதால் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 8,932 என நிர்ணயிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
காலி பணியிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளதை கருத்தில் கொண்டு, டிஎன்பிஎஸ்சி பிளாக் 4-ன் கீழ் உள்ள பணியிடங்களை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக உயர்த்தி, அரசு துறைகளில் சமூக நீதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.