செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக 287 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 287 வெள்ள நிவாரண முகாம்கள் மற்றும் 20 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் டிட்வா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் புதுச்சேரியில் கரையை கடக்குமென்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இந்த புயலால் பாதிப்புகள் அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் விரிவான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 54 இடங்களில் சமூக சமையலறைகள் தயார் நிலையில் உள்ளன. மின்வாரியம் மூலம் மின்கம்பங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலையில் மக்கள் தங்குவதற்காக 287 வெள்ள நிவாரண முகாம்கள், 20 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளன. கூடுதலாக கானாத்தூர், நெம்மேலி, பட்டிபுலம் ஆகிய இடங்களில் 3 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும் செயல்பாட்டில் உள்ளன.
தாம்பரம் மாநகராட்சி முடிச்சூரில் 30 நபர்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. மேலும் கூடுவாஞ்சேரியில் 25 நபர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 390 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மிக அதிகளவில் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 71 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.