சென்னை: தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகிக்கப்படும். இது தொடர்பாக, தேர்வுகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகிக்கப்படும்.

இதற்கான சான்றிதழ்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி முதல்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனிப்பட்ட தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் சான்றிதழ்களைப் பெறலாம்.
தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்களைப் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.