மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் படையப்பா யானைகள் மற்றும் ஒற்றை கொம்பு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து தொழிலாளர்களை மிரட்டி வருகின்றன. வீடுகளில் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு கொட்டி அழித்து வருகின்றனர்.
விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. குறிப்பாக படையப்பா யானைகள் கடந்த சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் குட்டியார் வாலி, சைலண்ட் வாலி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்த படையப்பா யானை கடந்த 12-ம் தேதி இரவு 7.30 மணியளவில் சாலையில் இறங்கியது. அப்போது சைலண்ட் வேலி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சீரியல் படப்பிடிப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருந்தன.
அப்போது, யானை நடுரோட்டில் சிக்கியது. யானைக்கு முன்னாலும் பின்னாலும் வாகனங்கள் வந்தன. இதனால் பதற்றமடைந்த யானை ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாகி இரண்டு கார்களை தும்பிக்கையால் அடித்து நொறுக்கியது. காரில் இருந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியதால் அவர்கள் காயமின்றி தப்பினர். தகவலறிந்து வந்த வனத்துறையின் யானைக்கட்டுப்பாட்டு பிரிவு போலீசார் யானையை விரட்டினர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.