சென்னை: கல்வி, கலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் 2026-ம் ஆண்டு பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ஆர்.மணீஷ் ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-
2026-ல் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள தரப்பினர் ஜூலை 31-ம் தேதிக்குள் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இனம், தொழில், பதவி அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளை ஆன்லைனில் அனுப்பலாம்.

அந்தந்த துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விளம்பரத்திற்காக அல்ல, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். பொதுமக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டவர் செய்த சாதனைகள் மற்றும் சேவைகளை 800 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிட வேண்டும். மேலும், அந்த நபரின் நியமனத்திற்கான காரணத்தை தெளிவாக விளக்க வேண்டும். பத்ம விருதுகளுக்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் https://www.padmaawards.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.