மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக நேற்று திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முதல்வராக இருப்பார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ. விநாயகம், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வி.கே. செல்வம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக தோல்வி பயத்தில் இருப்பதால், மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பல்வேறு தடைகளை உருவாக்கி வருகின்றனர். கீழடி தொடர்பாக, ஏற்கனவே ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆதாரங்கள் தேவை. தமிழுக்கு சேவை செய்வதாக நடித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. வரும் தேர்தல்களில் அது எடுபடாது. விஜய் அரசியலில் நுழைந்ததால், யாருக்கு லாபம், நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பின்னரே தெரியும்.
அதே நேரத்தில், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பும் அனைத்து கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும். தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர வேண்டும். அதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒருமித்த கருத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முதல்வராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.