சென்னை: அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் குறித்து பேச அனுமதிக்காதது, நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆரணி, தென்காசி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது குறித்து அக்கட்சியினர் கூறியதாவது:
ஆரணி கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜெயசுதா மீது போளூர் ராஜன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பழனிசாமி குறுக்கிட்டு, ‘தனிப்பட்ட நபர்கள் குறித்து பேச வேண்டாம்’ என கண்டித்ததும், ‘பேசுவதற்கு தானே கூட்டம்’ என அவர் எதிர்த்து பேச, பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது குறுக்கிட்ட துணை பொதுச்செயலாளர் முனுசாமி, ‘ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசுவீர்களா? பொதுச்செயலாளர் உட்காரச் சொன்னால், உடனே உட்கார வேண்டும்’ என, அறிவுறுத்தினார்.
தென்காசி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என நிர்வாகிகளிடம் பழனிசாமி கேள்வி எழுப்பினார். நிர்வாகிகள் கூறுகையில், ‘ஒரே சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்தன. எங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தியிருந்தால் கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்றார்.
அதைக் கேட்ட பழனிசாமி, ‘கிருஷ்ணசாமி எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டார். நீங்கள் கடினமாக உழைத்திருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார். வேட்பாளரை பற்றி கவலைப்படாமல், சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், வலுவான கூட்டணி அமையும்,” என்றார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
கட்சியின் வளர்ச்சி குறித்து பழனிசாமி பேசினார். சட்டசபை தேர்தலுக்கான களப்பணியை துவங்கி விட்டோம். பழனிசாமி தேர்தல் வியூகத்தை தயார் செய்துள்ளார். பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது.
பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காதது தவறு. தமிழகத்துக்கு மத்திய நிதி ஒதுக்காதது தவறு. அதற்கு அழுத்தம் கொடுக்காதது திமுக அரசின் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.