சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால், இத்திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் 1000 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “நிலம் மற்றும் வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களுக்கு மேலாக அறவழிப் போராட்டம் நடத்தி வரும் பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள் நாளை நமதே!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஜனவரி 20-ம் தேதி, தவெக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் போராட்டக் குழுக்களையும், கிராம மக்களையும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.