ஊட்டி: ஆண்டுதோறும் டிசம்பரில் பூக்கும் சீன ராணி என்று அழைக்கப்படும் பவுலோனியா பார்சினி மலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர். பவுலோனியா பார்சினி எனப்படும் பூ வகை சீனாவின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர்கள் மரங்களில் வளரும். அவை சீனாவில் ஏராளமாக உள்ளன. இந்த மரங்கள் பல்வேறு கருவிகளை உருவாக்கவும், மர இழைகளை உற்பத்தி செய்யவும் வளர்க்கப்படுகின்றன.
குளிர்காலத்தில் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை), இந்த மரத்தின் அனைத்து கிளைகளிலும் பூக்கள் பூக்கும். மரமே இளஞ்சிவப்பு நிறத்துடன் வெண்மையாகத் தெரிகிறது. சீன மக்கள் இந்த பூக்களை சீனாவின் ராணி என்று அழைக்கிறார்கள். இந்த வகை மரங்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகின்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரே ஒரு மரம் மட்டுமே உள்ளது. இந்த மரம் பல ஆண்டுகளுக்கு முன் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த மரம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் பூக்கும். ஆனால் இந்த முறை கடந்த வாரம் வரை மழை பெய்ததால் ஊட்டியில் பனிப்பொழிவு குறைவாகவே காணப்பட்டது. இதனால், குளிர்காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் பூக்கள் மலரவில்லை. மரம் முழுவதும் மொட்டுகள் மட்டுமே காணப்பட்டன. தற்போது மழை குறைந்து கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், இந்த மரத்தின் ஒரு சில கிளைகள் மட்டுமே பூக்க ஆரம்பித்துள்ளன. இருப்பினும், இந்த அரிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.