கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு நீதித்துறை அகாடமியில் தென் மண்டல நீதிபதிகளுக்கான இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார், “விசாரணை மற்றும் நீதியில் தாமதம் ஏற்படாத வகையில் நீதித்துறை அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. நீதி வழங்கும் நீதிபதிகள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்து வருவது நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. எனவே, நீதிமன்றத்திற்கு வரும் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே நீதித்துறையின் முக்கிய கடமையாகும். இந்த பொறுப்பை நிறைவேற்ற, நீதித்துறை இணைந்து செயல்பட வேண்டும்,” என்றார்.
தேசிய நீதித்துறை அகாடமி இயக்குனர் அனிருதா போஸ் பேசுகையில், “இதுபோன்ற மாநாடுகள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண உதவும். நீதிபதிகள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூகத்திற்கு நீதித்துறையின் சேவை மிகவும் அவசியம்,” என்றார். சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும் போது, ”நீதித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய அம்சமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம், வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்,” என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் கூறுகையில், “நீதி தேவைப்படும் பலருக்கு அவர்களின் உரிமைகள் தெரியாது. நீதிபதிகள் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான வழக்குகளால், அவர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்கின்றனர்.
விசாரணை அட்டவணையை சமநிலைப்படுத்துவதில் நீதிபதிகளுக்கு கடினமான பணி உள்ளது.” சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி இயக்குநர் ஆர்.சத்யா, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அல்லி மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 150 நீதிபதிகள் பங்கேற்றனர். மாநாடு இன்று நிறைவடைகிறது.