தாம்பரம்: தீபாவளி பண்டிகைக்காக அக்., 31 மற்றும் நவ., 1-ம் தேதிகளில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில், சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்றனர். பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்களில் சென்னை திரும்ப துவங்கினர்.
இதனால் நேற்று மாலை முதல் கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால், போக்குவரத்து நெரிசலால் போலீசார் சிரமப்பட்டனர்.
இதேபோல் பாலாறு மேம்பாலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியிலும் நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் காட்டாங்கொளத்தூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.