தமிழ்நாட்டில் பாஜகவின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். நேற்று மதுரையை வந்தடைந்த அவர், இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பாஜக உயர்மட்ட மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அந்த நிகழ்வில் பேசும் போது, “திமுகவை அமித்ஷா தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் கூறியது உண்மைதான். ஆனால், திமுகவை மக்கள் தான் தோற்கடிப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய நீண்ட அரசியல் அனுபவத்தை மேற்கோளாக கொண்டு, வரும் தேர்தலில் திமுக அரசு மக்கள் வசம் இருந்து நிச்சயமாக தோல்வியடையும் எனவும் கூறினார்.
2026 தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானதென்று அமித்ஷா குறிப்பிட்டார். ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதேபோல தமிழ்நாட்டிலும் 2026ல் பாஜக ஆட்சி வரும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியுடன் கூறினார்.
திமுக அரசின் ஊழலை கடுமையாக விமர்சித்த அவர், மத்திய அரசு தரும் நலத் திட்டங்களை திமுக அரசு மக்களுக்கு அளிக்காமல் தடுத்து வைக்கிறது என குற்றம்சாட்டினார். டாஸ்மாக் ஊழலை எடுத்துக்காட்டி, 39 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக செலவாகி விட்டதாகவும் கூறினார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்தார்.
கள்ளச்சாராயம், சாதிவாதம், பிரிவினைவாத அரசியல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஆகியவையையும் திமுக ஆட்சியின் தோல்விக்கான காரணங்களாக சுட்டிக்காட்டினார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என கூறும் திமுக அரசின் முயற்சி பிரிவினைவாதத்தையே வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர் மாநாட்டைச் சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், அந்த வாயிலாக தமிழக மக்களின் ஒற்றுமையை உலகுக்கு காண்பிக்க வேண்டும் எனவும் அவர் பாஜகவினர் மீது நம்பிக்கை வைத்தார். பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முடிவில், திமுக ஆட்சியை அகற்றும் முனைப்புடன் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.