புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேராலயங்களில் முஸ்லீம்கள் உரிமை கொண்டாடுவதை எதிர்த்து, சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத இந்து முன்னணியின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் “பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என்றும், அரசியல் சாசனம் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தை, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என்று கூறி வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து யுவராஜ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பிரசன்னா வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.