தஞ்சாவூர்: .சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் டாக்ஸி வாகனங்களை தடை செய்யக்கோரி, தஞ்சை ட்ராவல்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா மோட்டார் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மூலம் உரிய அனுமதி பெற்று அரசு அறிவித்த அனைத்து வரிகளையும் உரிய காலத்தில் செலுத்தி தொழில் செய்து வருகிறோம்.
நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு, டீசல் விலை ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் எங்களுடைய சுற்றுலா வாகனம் இயக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது. மேலும் வாகனம் வாங்க வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டியுடன் தவணை தொகையையும் உரிய காலத்தில் செலுத்தி மிகுந்த சிரமத்தில் சுற்றுலா வாகனம் தொழில் செய்துவருகிறோம்.
விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டு செயல்படும் தஞ்சை மாவட்டத்தில் மாற்று தொழில் செய்ய வழி இல்லாத நாங்கள் சுற்றுலா வாகனம், மற்றும் வாடகை வாகனம் ஓட்டும் தொழிலை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.
இந்த நிலையில் சென்னை,வெளி மாநிலங்களில் அங்கு உள்ள முகவரியில் இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆன்லைன் செயலி வழியாக கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களில் தஞ்சையில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா வாகனம் உரிமம் பெற்று கால் டாக்ஸி என்கிற பெயரில் போக்குவரத்து சட்ட விதிகளை மீறி இயங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மோட்டார் வாகன சட்டத்தால் அங்கீகரிக்கபடாமல் சட்ட விதிகளை மீறி கார்ப்பரேட் நிறுவனங்களால் இயக்கப்படும். இந்த கால் டாக்ஸி வாகனங்களால் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து சுற்றுலா வாடகை வாகனம் மற்றும் மோட்டார் தொழில் செய்து வரும் நாங்கள் தொழில் ரீதியாக மிகுந்த பாதிப்பு அடைந்து உள்ளோம்.
மேலும் தஞ்சாவூர் பகுதியில் தங்களது சொந்த பயன் பாட்டுக்கு வாங்கிய தனியார் சொகுசு வாகனங்களும் சுற்றுலா வாகனமாக விதிகளுக்கு புறம்பாக வாடகைக்கு இயக்கபடுகிறது.
இது போன்ற தனியார் வாகனங்கள் சுற்றுலா வாகனமாக செயல்படுவதால் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய வரிகள் செலுத்தப்படாமல் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
எனவே நலிவடைந்து வரும் எங்கள் சுற்றுலா வாகனம் தொழிலை பாதுகாக்க வேண்டியும் எங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது