சென்னை: ‘250 – 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தை தமிழக அரசு தொடர வேண்டும்’ என, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் 250-400 பள்ளி மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதம் 700 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் புதிய உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தை குறைக்கும் நோக்கில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான திமுக அரசின் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அரசியல் நாடகத்திற்காக கல்விக் கொள்கைக் குழு என்ற பெயரில் திமுக அரசு அமைத்த குழுவின் அறிக்கையை முதலமைச்சரோ, அமைச்சர்களோ படிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இரண்டு வருட பொது மக்களின் வரிப்பணம் ஒரு குழுவிற்கு வெறும் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.
புதிய அரசாணையால், அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தில் இருந்து மாணவர்களை ஓரளவு காப்பாற்றி வருவது பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தான்.
கஞ்சா விற்பனைக்கு இடையூறு விளைவிப்பவர்களைத் தடுக்கவே திமுக அரசு இப்படி ஒரு விசித்திரமான அரசாணையைப் பிறப்பித்துள்ளது என்றுதான் நினைக்க வேண்டும். உடனடியாக, அரசாணையை ரத்து செய்து, தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.