புதுடெல்லி: டெல்லியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.75-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், வெங்காய விலையை குறைக்கும் நோக்கில், நாசிக்கில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து, ரயில் மூலம் வெங்காயத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் இருந்து 57 லாரிகளுக்கு சமமான 1,600 டன் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கண்டா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் டெல்லி வந்தது.
கண்டா என்றால் மராத்தியில் வெங்காயம். இந்த வெங்காயம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ ரூ.35-க்கு விற்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், சேமிப்புக் கிடங்குகளில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை ஏற்றிச் செல்ல, மத்திய அரசு இதுவரை லாரிகளை பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில், முதன்முறையாக ரயில் பெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயத்தை ரயில் மூலம் கொண்டு செல்வது மலிவானது. சாலை வழியாக கொண்டு சென்றால், 84 லட்சம் ரூபாய் செலவாகும்.
ஆனால், ரயிலில் கொண்டு செல்லப்பட்டதால் ரூ.70.20 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே தெரிவித்தார். இதேபோல் உத்தரபிரதேசம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.