சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் நடந்த வேதியியல் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடந்தது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர். கடைசி நாளான நேற்று வேதியியல், கணக்கு, புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ”1, 2 மதிப்பெண் வினாக்கள் தவிர, 3, 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டன. வழக்கமாக, 2-வது தொகுதி பாடப்புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஆனால், இந்த ஆண்டு, அந்த பகுதியில் இருந்து, 3 மற்றும் 5 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதனால், முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காது, என்றனர். அதேபோல் கணக்கு, புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் சற்று எளிதாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து மாணவ, மாணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 19 முதல், 30-ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, தமிழகம் முழுவதும், 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர். மதிப்பெண்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிந்து திட்டமிட்டபடி மே 19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்வை 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வின் போது அநாகரீகமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாக தெரிவித்துள்ளார்.