சென்னை: கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் இணையதளத்தில் பார்த்து பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் பட்டியலை பெற, தேர்வுக்கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வுக்கான விடைத்தாள் நகலை விரும்புபவர்கள் ஜூலை 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் ₹5.275 என பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பத்திற்கு தகுதி பெறுவர்.
விடைத்தாள் நகலை ஆன்லைனில் எப்போது பதிவிறக்கம் செய்யலாம், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களுக்கான தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.