டெல்லி: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படும் அப்துல் கலாம், இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓவில் பணிபுரிந்து பல்வேறு பெரிய ஏவுகணைத் திட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
பொக்ரான் அணுகுண்டு சோதனையில் அப்துல் கலாமின் பங்கு தொழில்நுட்ப ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியமானது. அப்துல் கலாம் இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகும், அப்துல் கலாம் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம்.
அப்துல் கலாமின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை இளைஞர் மறுமலர்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், ‘ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமின் 93-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி, அப்துல் கலாமை நினைவுகூரும் வகையில், எக்ஸ் தளத்தில் அவர் சந்தித்தது குறித்த காணொளியை வெளியிட்டுள்ளார். பிரபல விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி.
‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதில் அவரது தொலைநோக்கு பார்வையும், யோசனைகளும் பெரிதும் உதவும். அப்துல் கலாம் இயல்பாகவும் எளிமையாகவும் இருந்தார்.
இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர்; வாய்ப்புகளைத் தேடுபவர்கள் மற்றும் சவால்களைத் தேடுபவர்கள். அப்துல் கலாம் எப்போதும் சவால்களைத் தேடிக்கொண்டிருந்தார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.