சென்னை: தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வணங்கி, கரும்பு சுவைத்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை அன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்க இருக்கிறது.
தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக விவசாய குடும்பங்களில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளாக ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சொல்வார்கள். 1958-ம் ஆண்டு ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் கவிஞர் மருதகாசி, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம், தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம், ஆடியிலே விதை விதைச்சோம் தங்கமே தங்கம், ஐப்பசியிலே களை எடுத்தோம் தங்கமே தங்கம், கார்த்திகையிலே கதிராச்சு தங்கமே தங்கம், கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்…’ என்று வரிகள் வரும் பாடலை எழுதியிருந்தார்.
இது விவசாயத்தையும், தைப்பொங்கலின் சிறப்பையும் அப்படியே இன்றும் படம்பிடித்து காட்டுகிறது. இந்தப்பாடலில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆடியிலே விதை விதைத்து இப்போது அறுவடை கண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வில் தைத்திருநாள் வளம்கொண்டு வரும் நாளாக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. இப்பண்டிகையை கொண்டாட சாதி-மதம் என்ற பேதம் கிடையாது. அனைவருக்கும் பொதுவான, அதிலும் தமிழர்களுக்கே உரித்தான பண்டிகையாகும். நாம் கொண்டாடும் மற்ற அனைத்து பண்டிகைகளும் பிறந்த இடம் தமிழ்நாடு இல்லை. ஆனால், பொங்கல் பண்டிகை மட்டும்தான் நமது தாய் பண்டிகை என்று கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் தோன்றியது.
சங்க இலக்கியங்களிலேயே இத்திருநாள் குறிப்பிடப்பட்டிருப்பதால், சரித்திர காலம்தொட்டே இந்த நல்லநாள் கொண்டாடப்பட்டு வருவது புலனாகிறது. தை பொங்கலுக்கு பல சிறப்புகள் உண்டு. இது 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாள் போகிப்பண்டிகை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தார்ப்பரியத்தின்படி வீட்டிலுள்ள பழைய பொருட்களையெல்லாம் கழித்து, எல்லாமே புதிதாத துலங்க வைப்பதுதான் போகிப்பண்டிகை. இதைவைத்து மற்றொரு பொருளும் கூறுவார்கள். உள்ளத்தில் உள்ள கவலைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியை புதிதாக பிறக்கச்செய்யும் நாள் இது.