தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் சூழலில், தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் உள்ளன. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறோம்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, அதைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. அதே நேரத்தில், தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு தேமுதிக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். இந்த விவகாரத்தில் தமிழக மக்களை காக்க தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.
பேட்டியின் போது, ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறிய கருத்து குறித்து பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பிரேமலதா பதிலளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.