சென்னை: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ளது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 படிப்புகளில் பயின்று வருகின்றனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ம் தேதி காலை நடைபெற உள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள 3-ம் தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடிற்கு மதியம் 12.30 மணியளவில் வந்தடைவார்.

மதிய உணவுக்குப் பிறகு, பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மத்திய பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி சிறப்பு உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர், ஜனாதிபதி திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருவார்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள சிறப்பு ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கும் அவர், பின்னர் காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்வார். பின்னர், ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையம் செல்லும் ஜனாதிபதி திரௌபதி முர்மு, விமானம் மூலம் டெல்லி புறப்படுவார். திருச்சி மற்றும் திருவாரூரில் ஜனாதிபதியின் வருகைக்காக போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.