சென்னை: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாவதுடன், கட்டுமானத் தொழில் முடங்கும் நிலையும், சாதாரண மக்களின் சொந்த இல்லக் கனவுகள் நிறைவேறாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரின் நலனை கருத்தில் கொண்டு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ. ஹென்றி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்ந்து வருகிறது. கட்டுமானத்திற்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களான சிமெண்ட், இரும்பு கம்பி, ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், செங்கல் உள்ளிட்ட பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வால் கட்டுமானத் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரச்சாமான்கள், சானிட்டரி பொருட்கள், பெயிண்டிங் மெட்டீரியல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் உட்பட அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. இதனால், கட்டுமானத் துறை நிலைகுலைந்துள்ளது.
இவ்வளவு விலை உயர்வுக்கு முக்கிய காரணம், மைய அரசு கட்டுமான பொருட்களுக்கு விதித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகும். சிமெண்ட் மற்றும் பாத்ரூம் பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி, இரும்பு கம்பிக்கு 18% ஜிஎஸ்டி என விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆடம்பரமான தங்கத்துக்கு மூன்று சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மூலப்பொருட்கள், எரிபொருள், போக்குவரத்து செலவு, தேசிய சாலை சுங்கக் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்களும், கிராமப்புற மக்கள், நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பல இடங்களில் வீடு கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள், வீடு கட்டும் பொதுமக்கள் திட்டங்களை சரியான நேரத்தில் முடித்து ஒப்படைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வு காரணமாக, தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாவதுடன், சாதாரண மக்களின் சொந்த இல்லக் கனவுகளும் தகர்ந்துபோவது கவலைக்குரியது. எனவே, தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் பேசி, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.