சென்னை: தற்போது மீன்பிடி படகுகளை இயக்க மண்ணெண்ணெய், டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடல் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. எனவே கடல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் படகுகளில் மண்ணெண்ணெய்க்கு பதிலாக கேஸ் சிலிண்டர்களை எரிபொருளாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் மண்ணெண்ணெய்யை எரிபொருளாக பயன்படுத்தாமல், எல்பிஜி (காஸ்) சிலிண்டர்களை பயன்படுத்தி மீன்பிடி படகுகளை இயக்கும் முன்னோடி திட்டம், இந்த ஆண்டு முதல் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 1.90 கோடி நிதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்த மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் 150 படகுகளுக்கு இந்தக் கருவிகள் பொருத்தப்படும்.
இந்த படகுகளின் பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச ஆட்டோ டெக்னாலஜி மையத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. மண்ணெண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது, 1.2% கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. இருப்பினும், எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் போது, 0.32% கார்பன் மோனாக்சைடு மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதேபோல், எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் போது, எரிபொருள் சேமிப்பு 9.9 குதிரைத்திறன் இயந்திரங்களுக்கு 56.54 சதவீதமாகவும், 25 குதிரைத்திறன் இயந்திரங்களுக்கு 65.64 சதவீதமாகவும் உள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் பயன்படுத்தும்போது, கடல் நீர் மற்றும் காற்று மாசுபடுகிறது. மேலும், மீனவர்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு ஏற்படுகிறது. சிலிண்டர்களை பயன்படுத்தி படகுகளை இயக்குவது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.