சென்னை: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்தியாவின் மூன்றாவது பழமையான பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தென்னிந்தியாவின் முதல் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகும். இந்த மருத்துவக் கல்லூரி 1953-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரி பல் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மையமாகவும் உள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவர்களின் திறன் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் கல்லூரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பயனாளிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி ரூ.56.5 கோடியில் தற்போதுள்ள கட்டடத்துடன் கூடுதலாக நான்கு தளங்கள் கட்டப்பட உள்ளன.
இது ஒரு தளத்திற்கு 33,600 சதுர அடி பரப்பளவை உருவாக்கும் மற்றும் மொத்த பரப்பளவு 1,34,400 சதுர அடி. மேலும், புதிதாக கட்டப்படும் இடங்களுக்கு ரூ.7.59 கோடியில் 100 புதிய பல் நாற்காலிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத்துக்கு ரூ.56.5 கோடி, உபகரணங்கள் ரூ.7.59 கோடி என மொத்தம் ரூ.64 கோடியில் மேம்படுத்தப்படும். இந்த அனுமதி பல் மருத்துவம், வாய்வழி நோயியல், பொது சுகாதார பல் மருத்துவம் மற்றும் பல் ஈறு அறுவை சிகிச்சை துறை போன்ற துறையையும் வலுப்படுத்தும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பல் பராமரிப்பு மேம்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.