அரூர்: காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாமக சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டத்தால் அரூர் மாவட்டத்தில் இன்று (அக்.4) பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றவும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பக் கோரி இன்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்புக்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, போராட்டத்தையொட்டி இன்று தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில கடைகளைத் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரூர், பொம்மிடி ஆகிய ஊர்களில் முன்னாள் எம்.எல்.ஏ., மாநில வேளாண்மை மற்றும் ஊரகப் பிரிவு செயலாளர் வேலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பாமக மாவட்ட செயலாளர் அரசு, மாநில நிர்வாகிகள் செந்தில், இமயவர்மன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உபரி நீர் திட்டத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி சென்றனர். இன்றைய போராட்டத்தை முன்னிட்டு அரூர் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.