சென்னை: சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் நலனுக்காக அரசாங்கம் தொடங்கிய சிறு சேமிப்புத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது மொபைல் வங்கி தளம் PNB ONE மூலம் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை ஆன்லைனில் திறக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை ஏற்கனவே உள்ள PNB வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனால், வங்கி கிளைகளுக்கு செல்வது அவசியமில்லை. பயனர்கள் PNB ONE செயலியில் உள்நுழைந்து சேவைகள் பிரிவில் அரசு சேவைகளைத் தேர்வு செய்து, சுகன்யா சம்ரித்தி கணக்கு திறப்பை தேர்ந்தெடுத்து கணக்கை திறக்கலாம். திரையில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்முறை முடிக்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் திறக்கக் கூடிய சேமிப்பு கணக்கு ஆகும். இதன் நோக்கம் மகள்களின் கல்வி, திருமணச் செலவுகளுக்காக பெற்றோர்களை ஊக்குவிப்பதாகும். குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ₹250 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீடு ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. கணக்கு திறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும் போது அல்லது திருமணம் ஆகும் வரை இந்த திட்டம் செயல்படும்.
வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் பங்களிப்புகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதற்கு மேலும்வட்டி வருவாய் மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தால் காலாண்டுதோறும் மாற்றப்படும். ஆரம்பத்தில், 2015-ஆம் ஆண்டு இது 9.1% வட்டி வழங்கியது. பிறகு ஏப்ரல் 2015-ல் 9.2% ஆக உயர்ந்தது. ஆனால் 2016-க்கு பிறகு வட்டி விகிதம் குறைந்து, 2020 முதல் 2022 வரை 7.6% என்ற மிகக் குறைந்த வட்டியை வழங்கியது. தற்போது 2024 முதல் SSY கணக்கு 8.2% வட்டி அளிக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த திட்டத்தை PNB ONE செயலி மூலம் எளிதாகவும் விரைவாகவும் திறக்கலாம் என வாடிக்கையாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளது. அரசாங்கம் கூறுவதன் படி, பெண்களுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் அடுத்த நான்கு மாதங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படாது. இதனால் 2025 ஜூன் மாதம் முதல் நடைபெறும் காலாண்டிலும் தற்போதைய வட்டி விகிதம் தொடரும். இந்த திட்டத்தில் 21 ஆண்டுகள் வரை சேமிப்பது சாத்தியமாகும். இது பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக ஒரு நல்ல சேமிப்பு வழியாக கருதப்படுகிறது.