சென்னை: சொத்து ஆவணங்களை பதிவு செய்வதன் நோக்கம் மேற்படி ஆவணம் செயல்படுத்தப்பட்டது என்பதை உலகுக்கு தெரிவிப்பதற்காகவே ஆகும்.
ஆவணத்தை பதிவு செய்வதனாலேயே மட்டும் சொத்தின் மீது உரிமை கோர முடியாது. ஆனால், பதிவானது செயல்பாட்டிற்கான ஆதாரமாக விளங்குகிறது. பதிவுச் சட்டம், 1908 பதிவு சம்பந்தமான அதிகாரங்களையும் வழிமுறைகளையும் வழங்குகிறது.
வில்லங்க சான்றிதழில் சர்வே எண், மொத்த பரப்பு, நிலத்தின் நான்கு எல்லைகள், ஆவண எண், சார் பதிவாளர் அலுவலகத்தில் குறிபிட்டுள்ள தொகுதி மற்றும் பக்கங்கள் இருக்கும்.
சொத்தின் தன்மை, கை மாறிய மதிப்பு, பதிவு செய்யப்பட்ட நாள், சொத்தை வாங்கியவர் மற்றும் விற்பனை செய்தவர், ஜெனரல் பவர் அட்டார்னி வாங்கியவர்கள் அடமானம் வைத்தவர் மற்றும் பெற்றவர், சொத்தை வாங்க, விற்க ஒப்பந்தம் போட்டவர்கள், பெயர்கள் இடம்பெறும். கேட்கும் வருடத்தில் அல்லது வருடங்களில் எந்த பரிமாற்றமும் இல்லை எனில் இல்லை (நில்) என பதிவு தரப்படும்.
நாமே நேரடியாக அல்லது நன்கு விவரம் அறிந்த நம்பிக்கையானவர்கள் மூலம் சொத்தை பதிவு செய்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பெறப்படும் வில்லங்க சான்றிதழ் நம்பக தன்மை கொண்டது. இருந்தாலும் தவறுகள் நடக்க வாய்ப்பும் உண்டு.
ஒரு சொத்தின் முழு உரிமை உடையவரை கண்டு கொள்ள இந்த சான்றிதழ் மட்டும் போதுமானதல்ல. சர்வே எண்களை மாற்றி, மொத்த பரப்பு நான்கு எல்லைகள் அவற்றின் அளவுகளை கூட்டி அல்லது குறைத்து குறிப்பிட்டு தேடும் வில்லங்க சான்றிதழ் விண்ணப்பத்தில் தகவல்கள் முழுமையாகக் கிடைக்காது.
சொத்தின் உரிமையாளர் சம்மதம் இன்றி, சொத்தின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதான் உண்மையான வில்லங்கம் ஆகும். மற்றவையெல்லாம் வில்லங்கச் சான்றை பதிவு குறிப்பு சான்று எனலாம்.
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பீடு செய்யப்பட்டு அரசு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கு வழிகாட்டி மதிப்பு என்று பெயர்.
செயல்படுத்திய ஆவணங்களை, அந்த சொத்துள்ள அதிகார எல்லைக்குள் இருக்கும் சார் பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளரிடம் நாடி பதிவு செய்து கொள்ள வேண்டும்.