கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

விசாரணையின் போது, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தரப்பில் வாதித்த வழக்கறிஞர்கள், “காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆர் தவறானது. அதிக மக்கள் வருவதை முன்கூட்டியே கணிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. எங்கள் கட்சிக்கு குறுகிய இடமே வழங்கப்பட்டது. காலியான ஆம்புலன்ஸ் கூட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது. இது திட்டமிட்ட செயல் அல்ல, விபத்துகளை விபத்துகளாகவே பார்க்க வேண்டும்” என வாதிட்டனர்.
மறுபுறம் அரசு தரப்பு, “இந்த சம்பவத்திற்கு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர்களே நேரடி காரணம். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வலியுறுத்தியது.
இருதரப்பினரின் பரபரப்பான வாதங்களை கேட்ட நீதிமன்றம், முன்ஜாமீன் தொடர்பான உத்தரவை இன்று மாலை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா, இல்லையா என்பது குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.