சென்னை சென்ட்ரல் – ஆவடி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை திருவள்ளூர் வரை நீட்டிப்பது தொடர்பான பயணிகளின் கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. அதில், தற்போது இந்த ரயில் சேவையை நீட்டிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் பீக் ஹவர்ஸில் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதல் மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை சென்ட்ரல் – ஆவடி இடையேயும், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையேயும், இம்மாதம் முதல் வாரத்தில், புதிய மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது. எனினும், இந்த ரயில் சேவையை நீட்டிக்கவும், நேரத்தை மாற்றவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, திருநின்றவூர் ரயில்வே பயணிகள் நலச் சங்கத் தலைவர் முருகையன் தாக்கல் செய்த மனுவில், சென்ட்ரல் – ஆவடி இடையே இயக்கப்படும் இரண்டு ரயில்களையும் திருவள்ளூர் வரை நீட்டிக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் நள்ளிரவு 12.15 ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ரயில்வே பதில் அளித்துள்ளது. அதில், சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆவடி ரயில்களை திருவள்ளூர் வரை நீட்டிப்பது தற்போது சாத்தியமில்லை. சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு புறப்படும் ரயில்கள் இயக்கப்பட்ட பின் ஆவடி கார் ஷெட்டில் பராமரிப்பு பணிக்காக அனுப்பப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான உங்கள் ஆலோசனை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படலாம். உங்கள் மற்ற பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில், அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும், 12 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எண்ணிக்கை, 36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி மற்றும் தவிர்க்க முடியாத இயக்க காரணங்களால், 2023-ல் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், பராமரிப்பு பணி முடிந்ததும், ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை சீரமைப்பது குறித்து பரிசீலிக்கலாம்,” என்றார்.