
சென்னை: இரத்த தானம் செய்பவர்கள் வருடத்திற்கு 4 ஸ்பெஷல் விடுப்பு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவ சிகிச்சைக்காக நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் பெரம்பூர், திருச்சி, மதுரை உட்பட தெற்கு ரயில்வேயில் 6 ரயில்வே மருத்துவமனைகள் உள்ளன.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின் போது, ரயில்வே ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களின் தன்னார்வ குழுக்கள் இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக தானம் செய்கின்றனர். அப்போது, சொந்த விடுப்பில் சென்று ரத்ததானம் செய்கின்றனர். எனவே, ரத்த தானம் செய்பவர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரத்ததானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு விடுமுறை ஆண்டுக்கு 4 முறை வழங்கப்படும். ரத்த தானம் செய்வதற்கு உரிய மருத்துவச் சான்றிதழைப் பெற்ற பின்னரே இதை சிறப்பு விடுமுறையாக ரயில்வே நிர்வாகம் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டி.ஆர்.இ.யு. ரயில்வே தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறியதாவது:- ரயில்வே ஊழியர்கள் தனிப்பட்ட விடுப்பில் சென்று ரத்ததானம் செய்கின்றனர். தற்போது சிறப்பு விடுமுறை எடுக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதை வரவேற்கிறோம். இதன் மூலம் சமூகப் பணி செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கம் கிடைக்கும். இது அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.