சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை கடுமையான வெப்பம் நிலவியது. குறிப்பாக நேற்று மாலை 5.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சராசரி வெப்பநிலை 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, நிலவும் வெப்பமும் மக்களை வருத்தப்படுத்தியது. இதற்கிடையில், மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மாலை 7 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. சென்னை தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம், பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், அம்பத்தூர், அயப்பாக்கம், முகர்ஜி, வேப்பேரி, புரசைவாக்கம், வியாசர்பாடி, ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் இரவு குளிர்ச்சியாக இருந்தது. அதேநேரம், மழையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலையோரங்களில் மழைநீர் தேங்கிய சம்பவங்களும் நடந்தன.