தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல தாழ்வுப் பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அணைக்கட்டில் 8 செ.மீ., மாம்பழத்துறையாறில் 7 செ.மீ., கிருஷ்ணகிரியில் 6 செ.மீ., கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 4 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, உதகை, சிவகாசிபாளையம், கோவை மாவட்டம் உதகையில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், சோத்துப்பாறை, தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணையில் மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.