சென்னை; மழைக்காலத்தில் வரும் நோய்களிலிருந்து தப்பிக்க நாம் அணியும் ஆடைகள் மற்றும் காலணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காரணம், சரியாக உலர வைக்கப்படாத ஆடைகள் மற்றும் காலணிகளில் பூஞ்சைகள் (Fungus) வளர வாய்ப்புள்ளது. இதனால் சரும பிரச்னைகள் ஏற்படலாம்.
மழைக்காலமோ, வெயில் காலமோ எல்லா நேரத்திலும் ஆடைகளை அலமாரியில் மடித்து வைக்காமல், ஹேங்கரில் மாட்டி வைப்பதே சிறந்தது. ஆடைகளைத் துவைத்து நன்றாகக் காயவைத்த பிறகே ஹேங்கரில் மாட்ட வேண்டும். அரைகுறையாக உலர்ந்த ஈர ஆடைகளை அலமாரியில் அப்படியே மடித்து வைக்கக் கூடாது.
ஈரப்பதம் உள்ள ஆடைகளில் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகள் வளரலாம். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு ஆடைகள் மக்கும் நிலைக்குச் சென்றுவிடும். பூஞ்சைகள் வளர்ந்த ஆடைகளை அணியும்போது, பூஞ்சைத் தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் நமக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னை வீட்டில் அதிகரிக்கும் ஈரப்பதம். நீங்கள் ஆடைகள் வைக்கும் இடத்தில் அதிக ஈரப்பதம் இருப்பின், அங்கு கொஞ்சம் கற்பூரத்தை வைக்கலாம். கற்பூரம் ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், உங்கள் அலமாரியையும் நன்றாக மணமுள்ளதாக வைத்திருக்கும்.
துணிகளுக்கு இடையில் சில நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வைக்கலாம். நாப்தலின் உருண்டைகள், பூச்சிகள் மற்றும் கறையான்களைத் தடுக்கும். நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும் தடைசெய்கிறது. பல காலங்களாக அணியாமல் அலமாரியில் சேர்த்து வைத்திருக்கும் ஆடைகளை அப்புறப்படுத்திவிட்டு அணியக்கூடிய ஆடைகளை மட்டுமே ஹேங்கரில் மாட்டி வைத்திருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் எடை குறைவான, விரைவில் ஈரத்தை உறிஞ்சக் கூடிய உடையைத் தேர்வு செய்து அணிய வேண்டும். எளிதில் உலராத, கனமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதைத் தவிர்க்கலாம். பாதம் வரை தொடும் ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பெண்கள் முழுநீள குர்தா, கவுன் அணிவதை மழைக்காலத்தில் தவிருங்கள். முட்டிக்கு மேல் வரை உள்ள குர்தா, டாப் அணியுங்கள். ஆண்கள் ஷார்ட்ஸ், லூஸாக இருக்கும் பேன்ட் அணியலாம்.
பெண்கள் கணுக்கால்வரை நீளமுள்ள லெகிங்ஸ் பேன்ட் அணியலாம். இதனால் சகதிகள், கழிவு நீர் ஆடையில் படாமல் தவிர்க்க முடியும். பொதுவாக மழைக்காலத்தில் பட்டு மற்றும் நெட் வகை சேலைகளை அணிவதைத் தவிர்க்கவும். லேசான காட்டன் வகை சேலைகளை அணியலாம்.